Monday, November 12, 2007

கருநாகம் புகுந்த கர்நாடகம்


சர்ஜுன்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகவில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. 20 மாதங்கள் மதசார்பற்ற (?) ஜனதாதளத்தின் தலைமையில் ஆட்சியும், அடுத்த 20 மாதங்களுக்கு பாரதீய ஜனதா தலைமையிலும் ஆட்சி செய்வது என வாய்மொழியாக முடிவு செய்யப்பட்டது.

சந்தர்ப்பவாத தேவேகவுடா கட்சியினர் தங்களுக்கு வாக்களித்த மக்களை மடையர்களாக எண்ணிக்கொண்டு மதவாத பாஜகவுடன் கை கோர்த்தனர். 20 மாதங்கள் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி பதவி சுகத்தில் திளைத்திருந்த வேளையில் உடுப்பியும் மங்களூரும் காவி பாசிஷவாதிகளிடம் மாட்டிக்கொண்டு திணறித் தவித்தது. அப்பாவி முஸ்லிம்கள் சொல்லொணா துயரத்திற்கு இலக்காயினர்.

மதசார்பற்ற ஜனதாதளம் என்ற பெயரில் கட்சி நடத்துபவர்கள் வைத்துக் கொண்ட வெட்கங்கெட்ட கூட்டணியால் இத்தகைய அவலம் நடந்தது. மதசார்பற்ற ஜனதாதளம் தனது கொள்கையைக் காற்றில் பறக்கவிட, பாஜக கொள்ளை பிடிப்பு பிசகாமல் நடந்து கொண்டது. அதோடு கர்நாடகாவை குஜராத்தாக மாற்றுவதே தமது இலட்சியம் என்றும் முழங்கினார்கள்.
பலதரப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மதசார்பற்ற(?) ஜனதா தளம், மக்களின் பார்வையில் மிகவும் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

'முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது பன்முக நடிப்புத் திறமையைக் காட்டியதன் மூலம் ஆஸ்கார் விருது கூடப் போதாது இவரின் திறமைக்கு'' என தொழில் முறை நடிகர்கள் கூட மூக்கில் விரலை வைத்தனர்.பாஜகவினர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாநிலத்தை சுரண்டி காவிக் காடாக்கி கலவரப் பிரதேசமாக்கினர். மதசார்பற்ற ஜனதாதளத்தின் காலம் முடிந்த பிறகு பாஜகவின் வன்முறை என காவிப்பட்டாளம் ஆவலோடு காத்திருந்தது.பதவியைப் பிரிய மனமில்லாத தேவேகவுடா கட்சியினர் பாஜகவைப் பற்றி புதிதாக அறிந்து கொண்டதைப் போல, மதவாத கட்சி என்றும், கலவர பூமியாக கர்நாடகாவை மாற்றப் போகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

முதன்முறையாக தென்னிந்தியாவில் ஆட்சியமைக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்ற தவிப்புடன் பாஜக கிடந்து அல்லாட வேறு வழியில் முதல்வர் பதவியை பெற முடியுமா என மதசார்பற்ற (?) ஜனதா தளம் வெறியுடன் திண்டாட இந்திய ஜனநாயகத்தை இழிவுப்படுத்திய பெருமைக்கு (!) இவ்விரு தரப்பினரும் ஆளானார்கள். சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக டெல்லியிருந்து தினமும் புறப்பட்டு வந்த பாஜக தலைவர்கள் தேவேகவுடா தரப்பினரை தாஜா செய்வதை தொடர்ந்தனர். அது பாஜகாவா இல்லை 'தாஜா'வா என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருந்தது. தேவேகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என கிராமத்துக் மூதாட்டி போல சாபம்விட்டனர் பாஜகவினர்.

தற்போது திரை மறைவில் நடந்த பேரங்களால் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேவேகவுடா கட்சி ஆதரவு வழங்குவதோடு அமைச்சரவையிலும் இடம் பெறப்போகிறது. முதல்வராக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான எடியூரப்பா முதல்வராகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அத்வானிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் முகமெல்லாம் மலர்ச்சி அகமெல்லாம் பூரிப்பு.சமூக நீதிக்கான தளமாக இருந்த கர்நாடகாவில் கருநாகப் பாம்பு குடி புகுந்ததைப் போன்று காவி பாசிஷ வாதிகள் அரசமைத்து விட்டனர்.உலகம் மறக்க முடியாத பாசிஷ பயங்கரவாதிகள் இவர்கள் என்பதை காந்தியாரின் படுகொலையும், பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பும், குஜராத் இனப்படுகொலையும் நிரூபித்திருக்கிறது.

கர்நாடகத்தின் சமாதானத்தை சாய்க்க வடநாட்டில் தங்கள் தளங்களை இங்கு இழந்தவர்கள் இங்கு வந்துவிட்டனர். பதவிக்காக பாசிஷவாதிகளுக்கு பல்லக்கு தூக்கியவர்களுக்கு வாக்களித்தோமே என வேதனையில் விம்முகிறார்கள் சிறுபான்மை சமூகத்தினர்.சந்தர்ப்பவாத சதிகாரர்களுக்கும் பாசிஷ பயங்கரவாதிகளுக்கும் வாக்குச்சீட்டின் மூலம் பதிலடி கொடுக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

No comments: