Tuesday, November 6, 2007

தண்டிக்கப்படும் அரசியல் சாசனம்

மரியம் குமாரன்

கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட 168 பேர்களில் அப்துல் நாசர் மதானி உட்பட 8 பேர் எவ்வித தண்டனையும் இல்லாமல் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். 70 பேர் மீது கூட்டு சதி, கொலை உள்ளிட்ட கடுங்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. சிறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட 86 பேருக்கு அளிக்கப்பட்ட தண்டனை அவர்கள் சிறையிலிருந்த காலத்தை கணக்கில் கொண்டு கழித்து கொள்ளப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். 86ல் 5 பேர் மீது 'வேறு வழக்குகள்' உள்ளதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடுங்குற்றம் நிரூபிக்கப்பட்ட 70 பேரில் 43 பேருக்கு ஆயுள் தண்டனையும், 26 பேருக்கு இரட்டை ஆயுளும் ஒருவரு க்கு மூன்று ஆயுளும், மற்றொருவருக்கு நான்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டன. அப்ரூவர் ரியாசுர் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டார். இருட்டுச் சிறைகளில் இவர்கள் இழந்த இளமையை யார் மீட்டுத்தரப் போகிறார் கள்? இதற்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது? என்ற ஆதங்கம் ஒருபுறம் மனதை அரித்தாலும், இப்போதாவது இவர்கள் விடுவிக்கப்பட்டார்களே என்று ஆறுதல் கொள்ள வேண்டியுள்ளது. அப்பாவிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட வர்களில் கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துந்நாசர் மதானியும் ஒருவர்.

இவ்வழக்கில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அல்உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா, செயலாளர் அன்சாரி ஆகியோர் இதில் அடங்குவர்.

இவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பல மதவாத அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். சில பத்திரிகைகளும் கூட அவ்வாறு எழுதி கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி உத்திராபதி மிக நிதானமாகவே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தூக்குத் தண்டனையே கூடாது என்று கோருபவர்கள் தங்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பது ஒருபுறமிருந்தாலும் மரண தண்டனை தேவை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப் பட்டிருக்குமேயானால் அது நியாயமற்ற தீர்ப்பாக அமைந்திருக்கும்.

தூக்குத் தண்டனை விதிக்கும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் துல்லியமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும் அப்பாவி களுக்கு விசாரணை முறையும் நீண்ட கால சிறையுமே பெரும் தண்டனைகளாகி விட்டன. பல்லாயிரம் பேர் உயிர்களைப் பறித்த நரேந்திர மோடி, பால்தாக்கரே, அத்வானி போன்ற கொடுமைக்காரர் களுக்கு இன்னும் தண்டனை வழங்கப் படவே இல்லை. மாறாக உயர்பதவிகளில் அவர்கள் உட்கார வைக்கப்பட்டு அரசியல் சாசனம் தண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வர்கள் ஏற்கனவே முக்கால்வாசி தண்டனைக் காலத்தைக் கடந்து விட்டார்கள். தீவிரவாதம் எதற்கும் தீர்வாக இருக்க முடியாது என்பதற்கு நம்மில் சில இளைஞர்கள் நல்ல சான்றுகளாகி விட்டார்கள். அவர்கள் பிறவித் தீவிரவாதிகள் இல்லை. அவர்களைத் தீவிரவாதிகளால் மாற்றியது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?

'தீபங்களே தெரிந்து கொள்ளுங்கள். திரிகள்தான் எரிகின்றன, தூண்டுகோல் கள் சுகமாகத் தூங்குகின்றன' என்ற மேத்தாவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. இவர்களை இந்த நிலைக்கு ஆரம்பத்தில் தயார்படுத்தியவர்களை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. உணர்ச்சி வேகத்திற்குப் பலியானவர் களுக்கு தூக்குத் தண்டனை அளிக்காத இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

சாக்கடைகளை அழிக்காமல் கொசுக் களை மட்டும் குற்றம்சாட்டி பயனில்லை.
விளைவுகளுக்கு விலங்கு மாட்டி விட்டு காரணங்களைக் கைவிட்டு விடுவதும் நீதிக்கு அழகில்லை.

ஆம், இவர்கள் உருவானதைக்கான கா'ரணங்கள்' களையப்பட வேண்டும்

No comments: