Monday, January 14, 2008

அமெரிக்கா, மனித குலத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் மலேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்






அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக அமைதிக்கும், மனித குலத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக மலேசிய உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவருமான முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம்கள் மற்றும் மூன்றாம் உலகநாடுகளிடையே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தாக்கம் என்ற தலைப்பில் முஹைதீன் சொற்பொழிவாற்றினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னை ஹோட்டல் பிரசிடெண்டில் 29,12,2007 அன்று வழக்குரைஞர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்திருந்தது, இந்த கூட்டத்தில் முஹைதீன் பேசும்போது, அமெரிக்கா உலகையே ஆதிக்கம் செலுத்துவதாகவும், ஒவ்வொரு துறையிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதாகவும், அதை நோக்கமாகக் கொண்டே தனது வெளியுறவுக் கொள்கையை நிறுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களையும் உதாசீனம் செய்து, அடுக்கடுக்காய் பொய் கூறி ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் போரின் மூலம் ஆக்கிரமிப்பு செய்து இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான, போர் என்னும் பெயரால் ஈரானையும் சிரியாவையும் குறிவைக்கிறது.

கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளை இன்று சோமாலியா மக்களும் பாலஸ்தீன மக்களும் அனுபவித்து வருகிறார்கள் எனில் அதற்கு அமெரிக்காவின் நேரடியான, மற்றும் மறைமுகமாக மக்கள் விரோதக் கொள்கைகளும் மற்றும் அந்நாடுகள் மீதான அமெரிக்கா நிர்பந்தப்படுத்திய பொருளாதாரக் கொள்கையுமே காரணம் ஆகும் என்றும் காதர் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தை பிளவுபடுத்தி, அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தினை அபகரித்து உலகம் முழுவதையும் பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் செல்வாக்கு பெற விரும்புகிறது என்றும் நடுநிலையான மக்கள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

No comments: