Sunday, October 28, 2007

இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?

அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டுவதில் சீனா, மெக்சிகோ ஆகிய முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளி, நம்நாடு முதன்மை பெற்றுள்ளது.
உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது.வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம், இந்தியாவுக்கு ஓர் ஆண்டுக்குக்கு 25.7 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் ஆகும். உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவுக்கு 22.5 பில்லியன் டாலரும், மெக்சிகோவுக்கு 24.7 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியாகக் கிடைக்கின்றன.
இந்தியாவிற்கு வெளிநாட்டில் பணிபுரிபவர் களின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி மேற்கண்ட முன்னணி நாடுகளையும் முந்தி விட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஈட்டுகின்ற வருவாய் நாட்டின் நட்டுமொத்த ராணுவ செலவினைக்கு நிகரானதாகும்.
தேசிய நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை விட, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியா ஈட்டும் தொகை 5 மடங்கு அதிகமாகும்.
வருமான வரி, மற்றும் சொத்துவரி மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருவாயை விடவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாகும்.வெளிநாடுகள் நம் நாட்டில் செய்துள்ள நேரடி முதலீடுகளை விடவும் இத்தொகை மூன்று மடங்கு அதிகம் என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய செய்தியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 விழுக்காட்டிற்கு இது சமமானதாகும்.
இந்தியாவிற்குக் கிடைக்கும் அந்நிய செலா வணியை அளிப்பதில் கேரளமும், தமிழகமும் முன்னிலை வகிக்கின்றன. கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வி மையம் நடத்திய ஆய்வில் கேரளத்தில் 25 விழுக்காடு ஊர்களில், குடும்பத்திற்கு குறைந்த பட்சம் நால்வர் வெளிநாட்டில் பணிபுரிவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலிருந்து சுமார் 10 மில்லியன் பேரும், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிலிருந்து சுமார் 11.5 மில்லியன் பேரும் வெளிநாட்டில் பணிபுரிவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அந்நியச் செலாவணியின் பெரும் பகுதி நிதியை அனுப்புபவர்கள், மருத்துவ, பொறி யியல், கணிணித்துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அல்ல, சாதாரணக் கூலி வேலைக்காகச் சென்றவர்கள் என்பது ஆச்சர்யமான உண்மையாகும்.மேற்கண்ட தகவல்கள் உலக வங்கியால் வெளியிட்டப்பட்டவை ஆகும். சொந்தங் களைப் பிரிந்து, பிறந்த மண்ணைத் துறந்து, வெளிநாடுகளில் கடும் உடலுழைப்பை மேற் கொள்பவர்கள் தான் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டையே ஈடு செய்கின்றனர். இவற்றில் மிகப்பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. இத்தகைய மிகப்பெரிய உதவியை சொந்த நாட்டிற்குச் செய்து கொண்டிருப்பவர்களின் நிலை இங்கு எப்படி உள்ளது?
வருவாய் தேடி, பாலைவனம் நோக்கி சிறகடித்த, விசாப் பறவைகளின் நிலை, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. சிறப்புச் சலுகைகள் தரப்பட வேண்டிய அவர்களுக்கு, உரிய உரிமைகள் கூட மறுக்கப்படுவதை அறிந்தால் மனம் கசக்கும்.
வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாடுதோறும் சொந்த பந்தங்களைப் பிரிந்து தூரதேசங்களில் உழைப்பவர்களின் குடும்பங் களில் பிரச்சினை என்றால், அவர்களை அலைக்கழிப்பது, பணம் பிடுங்குவது, போன்ற மனசாட்சியற்ற செயல்களும் இங்கு அரங்கேறுவது நம் கவனத்திற்கு வருகின்றன. நாட்டிற்கு வருமானம் ஈட்டிக் கொடுப்பவர் களின் பிள்ளைகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க மற்றவர்களை விட அதிகக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.
இந்தக் குறைபாடுகள் களையப்படுவது தான் நாட்டின் நன்றியுணர்ச்சிக்கு அடையாளமாக இருக்கும்.

No comments: